Friday, April 17, 2015

எங்கள் ஊர்.

 எங்கள் ஊர்.

நான் பிறந்து வளர்ந்த ஊர் கல்லிடைக் குறிச்சி.  திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் ஊர் பக்கம் உள்ள சிறிய கிராமம், பதினெட்டு தெரு பிராமண அக்ரகாரங்கள்.  ஆதிவராகப் பெருமாள் கோவில். அதனைச் சுற்றி மாடத் தெருக்கள். முன்னால் சன்னதித்தெரு. இவைகளை சுற்றி ரதவீதிகள். அழகான கிராமம். 

கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே மலைத் தொடர்கள். எந்தத் தெருவிலிருந்து பார்த்தாலும் சுற்றி சுற்றி மலைத் தொடர்கள் காட்சியளிக்கும் ஊர்.  தாமிரவருணி நதி  அக்கிரகாரத்தைச் சுற்றி கன்னடியன்கால் வாய்க்கால் அவைகளைச் சுற்றி பச்சை பசேல் என வயல்வெளிகள். மிகவும் அழகான ஊர். 

கிராமத்து வீடுகளில் குளியல் அறைகளை என்பதே இல்லை. ஒவ்வோர் வீட்டிலும் பின்பக்கத்தில் வாய்க்கால் ஓடும்.  மக்கள் அனைவரும் ஆற்றின்கரை (நதிக்கரை)யில் குளிப்பார்கள். காலை நான்கு மணி முதலே மக்கள் ஆற்றின் கரைக்கு குளிப்பதற்கு நடந்து செல்லும் ஓசை கேட்கும். 

ஒவ்வொருவரும் வழக்கமான இடத்தில் முங்கிக் குளிப்பார்கள். கண்ணாடி போன்ற தண்ணீரில் முகம் பார்க்கலாம்.  குளிரில் முங்கி குளிப்பதே சுகம் தான்.

பள்ளிக்கூடம் மிகவும் அருகில் இருந்தது. பள்ளியில் பெல் அடித்தால் வீட்டிலிருந்து கிளம்பி ஓடி விடுவோம். மாலை வேளையில் பெல் அடித்து ஓயும் முன்னரே வீட்டுக்கு ஓடி வந்து ஸ்டைலாக பள்ளிப் பையை உள்ளே தூக்கி எறிந்து விட்டு விளையாட்டில் மூழ்கி விடும்.  தெருக்களில் வீட்டுக்கு வீடு குழந்தைகள் இருந்தார்கள். இப்போது நகரங்களில் குழந்தைகள் தங்கள் இனத்தை தேடமுடியாமல் தவிக்கும் நிலை வந்து விட்டது.

சூரியின் மறையும் நேரத்தில் வீட்டுக்குள் வந்து விடுவோம். 8 மணிக்குள் இரவு உணவு. 9 மணிக்குள் ஊரே அடங்கி விடும். மின்சாரம் ஓரிரு வீடுகளில் மட்டுமே இருந்தது. சிம்னி விளக்கில் படித்தோம்.  காலையில் எழுந்ததும் போட்டி போட்டுக் கொண்டு சப்தம் போட்டு படிப்போம்.

குழந்தைகள் டார்ச்சர், டென்சன், அப்செட் போன்ற வார்த்தைகள் தெரியாமல் இருந்தார்கள். மிதமான கல்வி,மிதமான உணவு, மிதமான விளையாட்டு, என்றிருந்ததால் சொந்த பந்தங்களில் உறவுகள் அக்கம் பக்கத்தரின் உறவுகள் குழந்தைகளுக்கு சுகமாய்த் தெரிந்தன.

குழந்தைப் பருவத்திலேயே பணத்தை நோக்கி பயணம் செல்லும் காலம் அன்று இல்லை. அதனால் கல்வியில் போட்டியில்லாமல் இருந்தது. குழந்தைப் பருவத்திலேயே தனிமை வயப் பட்டு சுயநலம்நோக்கி பயணம் செய்யும் காலம் அன்று இல்லை. அதனால் வாழ்க்கை மனிதாபிமானம் நிறைந்ததாக இருந்தது. 

ஆறு முழுவதும் மணல் கொட்டிக் கிடந்தது.  மணல் திருடர்கள் இல்லை. அதனால் தண்ணீர் சுத்தமாக இருந்து. யாரும் விலை கொடுத்து வாங்கவில்லை. மனிதர்கள் இயற்கைக்கு மிகுந்த மரியாதை அளித்தனர்.